2015-07-07-20-39-39_deco

 

 

கவிஞர் கா.பாலபாரதி (G.Balabarathi), தமிழ் நாட்டின் தென் பகுதியில் உள்ள, ஒரு கடற்கரை மாவட்டமான இராமநாதபுரத்தில் பிறந்தவர். இவரின் தாய் கிராமமானது, அம்மாவட்டத்தில் உள்ள, இராஜ சிங்க மங்கலம் அருகில் உள்ள நோக்கனன்கோட்டை என்ற போதும், பாரனூர் என்ற கிராமத்தில், தன் குடும்பத்தோடு வசித்து வருகிறார். திரு.க.காந்தி திருமதி.கா.மீனாள் இவர்களின் புதல்வனான இவருக்கு, கோவில் கட்டுமானம் மற்றும் சிற்பக் கலையில் நிபுணரான பாலசுப்பிரமணி என்ற மூத்த சகோதரர் ஒருவரும் இருக்கிறார். கதை, கவிதை, கட்டுரைகளை எழுதும் திறன் வாய்க்கப் பெற்ற இவர், சிறந்த மேடைப் பேச்சாளராகவும், ஓவியராகவும், சமூக ஆர்வலராகவும் திகழ்கிறார். சமூக அக்கறை மிகுந்த இவர், தனது கவிதைகள், கட்டுரைகள் மூலம் சமூகத்தின் அவல நிலையைச் சீர் தூக்கிப் பார்ப்பதோடு அல்லாமல், பல்வேறு சமூக அமைப்புகளில் உறுப்பினராகவும் செயல்பட்டு வருகிறார்.
விவசாய குடும்பத்தைச் சேர்ந்த இவர், தனது தொடக்கப் பள்ளி வகுப்புகளை, பாரனூர் அரசுப் பள்ளியிலும்; உயர்நிலைக் கல்வியை, உப்பூர், அரசு உயர்நிலைப் பள்ளியிலும்; மேல்நிலைப் படிப்பை, ஆர்.எஸ்.மங்கலம், அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியிலும் பயின்றவர். மேலும், இளங்கலை(பி.எ) மற்றும் முதுகலை(எம்.ஏ) ஆங்கிலத்தை, காரைக்குடியில் உள்ள, அழகப்பா அரசுக் கலைக் கல்லூரியில் பயின்றவர். இளநிலை கல்வியியல்(பி.எட்) படிப்பை, காரைக்குடியில் உள்ள க்ஷ்ரி ராஜ ராஜன் கல்வியியல் கல்லூரியில் பயின்ற இவர், தற்போது ஆய்வியல் நிறைஞராக(எம்.பில்), அழகப்பா பல்கலைக்கழகத்தின், ஆங்கில மற்றும் அயல்நாட்டு மொழிகள் துறையில் பயின்று வருகிறார்.
பலதிறக் கலைஞராக விளங்கும் இவர், சுண்ணாம்புச் சிற்பம், எழுத்து, பேச்சு, ஓவியம், விவசாயம், தத்துவம், களிமண் உரு, நடிப்புத் திறன், உளவியல் போன்றவற்றில் அறிவும், இன்ன பிற செயல்களில் ஆர்வமும் கொண்டவராக விளங்குகிறார். தமிழ்நாடு கட்டற்ற மென்பொருள் அறக்கட்டளை மற்றும் காரைக்குடி, குனு/லினக்ஸ் பயனர் குழு போன்றவற்றில் தன்னார்வராக இருப்பதோடு, தொழில்நுட்பப் பயன்பாடு மற்றும் மென்பொருள் சுதந்திரம் பற்றிய பரப்புரையை தன் நண்பர்களோடு சேர்ந்து செய்து வருகிறார்.

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License

தீப்பந்தம் Copyright © 2015 by கா.பாலபாரதி is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License, except where otherwise noted.

Share This Book